மாசி மகம் 8-3-2020

மாசி மாதம் வந்தாலே நமக்கு மாசி மகம்தான் நினைவுக்கு வரும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை தமிழகத்தில் கும்பகோணத்தில் நடக்கும் மாசி மகத் திருவிழா (மகாமகம்) பிரசித்தி பெற்றது. வடஇந்தியாவில் ஹரித்துவார், பிரயாகை, உஜ்ஜயினி போன்ற இடங் களில் கும்பமேளா எனும் பெயரில் இத் திருவிழா நடைபெறுவதுண்டு. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன சமய வழிபாட்டு முறை. புண்ணிய நதிகளில் நீராடுவதன் மூலம் பாவங்கள் கழியும் என்பது நம் கலாச்சார நம்பிக்கை.v திருஞானசம்பந்தர் திருவெண்காட் டுப் பதிகத்தில்-

"வெண்காட்டு முக்குளநீர் தோய்வார் வினையார்

அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே'

எனப்பாடி, தீர்த்தங்களில் நீராடினால்

நம் தீவினைகள் தீருமெனக் குறிப்பிட்டுள் ளனர்.

"கங்காச யமுனாசைவ நர்மதாச

சரஸ்வதி கோதாவரி

ச காவேரி கன்யா

நாம்னா மஹாநதீ:

பயோஷ்ணிஸ்ரயூஸ் சைவ

நவைதாஸ்ஸரித: சுபா'

Advertisment

என்னும் சமஸ்கிருத சுலோகப் படி கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, கன்யா, பயோஷ்ணி, சரயூ ஆகிய ஒன்பது நதிகளும் புண்ணிய நதிகளே!

இந்த நதிகளில் நீராடினால், நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும் தோஷங் களும் விலகும். அதேபோன்று குடந்தை (குடமூக்கு) என்னும் கும்பகோண மகாமகக் குளத்தில் (பொற்றாமரைக்குளம்) நீராடி னால் அதிகப்பலன் உண்டு. "பூமருவும் கங்கைமுதல் புனிதமாம் பெருந்தீர்த்தம் மாமகந்தான் ஆடுவதற்கு வழிபடும் கோயில்' என சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறியுள்ளார். குடமூக்கு என்பதை திருநாவுக்கரசர், "கூத்தாடி உறை யும் குடமூக்கு' எனப் பாடியுள்ளார்.

கும்பகோணத்தில் இருக்கும் மகாமகக் குளத்தின் மகிமையை உணர்த்தும் ஒரு புராணக்கதை உண்டு.

Advertisment

bb

கங்கை, யமுனை, நர்மதை உள்ளிட்ட நதி தேவதைகள் ஒன்றுகூடி, ஒருநாள் கயிலையில் வீற்றிருக்கும் சிவபெருமானைக் காணச் சென்றார்கள். அவர்கள் சிவபெருமானிடம், ""மக்கள் எங்களிடம் வந்து நீராடித் தங்களைப் புனிதமாக்கிக்கொண்டு, அவர்களின் பாவங்களை எங்களிடம் விட்டுச் செல்கிறார் கள். நாங்கள் அந்த பாவத்தை எப்படிக் கழிப்பது?'' என வேண்டி னார்கள். அதற்கு சிவபெருமான், ""பூமியில் சோழவள நாடான கும்ப கோணத்தில் அமைந்திருக்கும் ஆதிகும்பேஸ்வரர் தீர்த்தத்தில் மகாமக நாளில் நான் நீராடுவேன். அந்தசமயத்தில் நீங்களும் அங்கு நீராடினால், உங்களிடம் மக்கள் கொடுத்துச்சென்ற பாவங்கள் விலகிவிடும். உங்களுக்கு அந்த பாவங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது'' எனக் கூறினார்.

இந்திரன் முதலான தேவர்களும் இங்குவந்து நீராடித் தங்களின் பாவங்களைத் தீர்த்துக் கொண்டனர். கங்கையைத்தான் மிகப்புனித நதி என்று கூறுவார்கள். அந்த கங்கையைவிட புனிதமான காவேரி நதி சுரக்கும் கும்பகோணக் குளம் உயர்ந்தது என குடந்தைப் புராணம் தெரிவிக்கிறது.

மாசிமகத் திருநாள் என்பது வானவியலை அடிப்படை யாகக்கொண்ட ஒரு புனித நாளாகும். கோள்களில் சந்திரன் மாதமொன்றில் 12 ராசிகளையும் கடக்கிறார்.

அதேபோன்று சூரியன் ஒரு ராசியைக் கடக்க ஒரு மாதமாகிறது. குருவானவர் (வியாழன்) ஒரு ராசியைக் கடக்க ஓராண்டு எடுத்துக்கொள்கிறார். இப்படியாக ஒவ்வோராண்டும் சூரியன் கும்ப ராசியில் சஞ்சாரம் செய்யும் மாதமே மாசி மாதம். இம்மாதத்தை மகாமாதம் என்றும் கூறுவார்கள். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி திதியன்று சூரியனும் சந்திரனும் எதிரே அமையும் நாளில் மக நட்சத்திரம்கூடிய தினமே மாசி மகம் என அழைக்கப்படு கிறது. அப்போது சந்திரன் மக நட்சத்திரத்துக்குரிய சிம்ம ராசியில் சஞ்சரிப்பார்.

சரி; மகாமகம் ஏன் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறதென்றால், ஜோதிட சாஸ்திரப்படி பிருஹஸ்பதியான தேவ குரு ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு காலம் சஞ்சரிப்பார். சிம்ம ராசிக்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறைதான் வரமுடியும் என்பதால், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே மகாமகத் திருவிழா வருகிறது.

சைவத் திருக்கோவில்கள் மட்டுமின்றி வைணவத் திருக்கோவில்களிலும் வருடந்தோறும் மாசி மகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீர்த்தமாடல், கடலாட்டு, ஆறாட்டு போன்றவை நமது பாரதக் கலாச்சாரத்தில் ஒன்றான விஷயம். நீர்நிலைகளைத் தேடிச்சென்று புனித நீராடல் செய்வது வழக்கம். பஞ்சபூதங்களில் ஒன்றான நீரை தெய்வமாக வழிபடுவது இயற்கை வழிபாடே. வடஇந்தியாவில் கும்பமேளா மூன்று வருடங்களுக்கு ஒருமுறையும், ஆறு வருடங்களுக்கு ஒருமுறையும் (அர்த்த மேளா), 12 வருடங்களுக்கு ஒருமுறையும் (பூரண மேளா), இதைவிட சிறப்பாக 144 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் (மஹாகும்பமேளா) கொண்டாடுவது வழக்கம். 2021-ஆம் ஆண்டு ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறவுள்ளது. இத் திருவிழா ஜனவரி 14-ஆம் தேதிமுதல் ஏப்ரல் 27-ஆம் தேதிவரை நடைபெறும்.

தமிழகத்தில் கோவில் நகரமான கும்பகோணத்தில் வருடந்தோறும் மாசிமகத் திருவிழாவும், 12 ஆண்டுக்கு ஒருமுறை மகாமகத் திருவிழாவும் சிறப் பாக நடைபெறும். புனிதமான கும்ப கோண நகரைப்பற்றி நம்மாழ்வார்-

"ஆராவமுதே அடியேனுடலம்

நின்பாலன்பாயே

நீராயலைந்து கரைய

உருக்குகின்ற நெடுமாலே!

சீரார் செந்நெல் கவரிவீசும்

செழுநீர்த் திருக்குடந்தை

ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்

கண்டேன் எம்மானே!'

எனப் பாடியுள்ளார்.

கும்பகோண மகாமகக் குளத்தில் குளித்தால் பாவங்கள் தீரும் என்பதை-

"சேதுவில் காசியில் செய்பெரும் பாவம்

கோதிலாக் கும்பகோணத்தில் தீரும்

கும்பகோணத்தின் கொடிய தீ வினைகள்

கும்பகோணமாம் குடந்தையில் தீரும்'

என்னும் கும்பேசர் குறவஞ்சிப் பாடல் தெரிவிக்கிறது.

தென்னாட்டவர்கள் வடக்கே கங்கை யில் புனிதநீராடி காசி விஸ்வநாதரை தரிசனம் செய்வார்கள். அதேபோன்று வடக்கே இருப்பவர்கள் தெற்கேயுள்ள இராமேஸ்வரத்தில் சேதுவில் கடலாடி இராமநாதரை தரிசனம் செய்வார்கள். இந்த வழக்கம் தொன்றுதொட்டு வரும் சம்பிரதாயம். இதன்மூலம் ஒருமைப்பாட்டு ணர்வு ஓங்குகிறது.

மாசிமகத் திருவிழாவின்போது சைவ- வைணவ திருக்கோவில்களில் சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள், தெப்போற்சவம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இன, மொழி, சமய வேறுபாடின்றி அனைவரும் மகாமகக் குளத்தில் நீராடி மகிழ்வார்கள்.